எனது பள்ளிப்பருவம் முழுவதும் அறிவியல், என்றாலே அது ஒரு கடினமான பாடமாகவே அறியப்பட்டது். இதற்குப் பல காரணங்களைப் பட்டியலிட முடியும். ஆனால், என்னை அறிவியல் நோக்கி ஆர்வம் கொள்ளச் செய்து, எனது வாழ்வாதாரம் மற்றும் ஆர்வம் என அனைத்தும் அறிவியலாகவே மாறிப்போனதற்கு மிக முக்கியப் பங்காற்றியது தாய்மொழி என்றுதான் சொல்லவேண்டும். பள்ளிப்பருவம் முழுக்கவும், ஆங்கில வழிக் கல்வியிலேயே கழித்தது இப்போதும் வருந்தும் ஒரு விடயமே.
கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிப்பை எடுத்தற்குக் காரணம், ஒன்று: இயற்பியல் மேல் உள்ள ஒரு சிறிய ஈடுபாடு, மற்றொன்று முதுகலையில் எப்படியாவது கணினி சார்ந்த படிப்புகளுக்குள் நுழையும் வாய்ப்பும் இருப்பதால். அறிவியல் மேலுள்ள ஈடுபாடு பின்னர் வாழ்க்கையே தடம்புறள வைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
இளங்கலை இரண்டாம் ஆண்டின் போது பொங்கலுக்காக வீட்டைச் சுத்தம் செய்யும் போது கையில் அகப்பட்ட ஒரு பனையோலைப் புத்தகம், அதாவது காகிதத்தை மடித்தால் இரண்டாகக் கையில் வரும் அளவுக்கு மக்கிப் போயிருந்தது. புத்தகத்தின் தலைப்பு "அனைவருக்கும் அறிவியல்" ஹிக்கின் பாத்தம்ஸ் பதிப்பகம் விலை ஒரு ரூபாய் என்றிருந்தது. ஒரு விபத்தாக அதனை விரித்துப் பார்த்தேன் என்றுதான் சொல்ல வேண்டும், அன்றிலிருந்து இன்று வரை நான் பாதுகாக்கும் செல்வங்களுள் ஒன்றாக அப்புத்தகம் இருக்கிறது.
அதற்கு முக்கியக் காரணம் அப்புத்தகம் மிக எளிமையாக அறிவியல் பேசியது, அதுவும் தமிழில், அதாவது மொழியைப் புரிந்து கொள்ள எவ்விதப் பயிற்சியும் தேவைப்படாத எனது தாய்மொழியில் இருந்தது மட்டும்தான் காரணம் என்று கருதுகிறேன். அதேவேளை தற்போது அது போன்ற புத்தகங்கள் காணக்கிடைக்காததும் நெருடலாகயிருந்தது. மற்றொரு முக்கியக் காரணி கல்லூரி வந்தபின்பு பள்ளியில் தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவருக்கு அறிவியல் வகுப்புகள் நடத்தியது. தமிழ்வழியில் அறிவியல் கற்பதன் அருமை எப்படிப்பட்டது என்பதை இரண்டு நிகழ்வுகளும் தெளிவாக உணர்த்தின.
அன்றிலிருந்து தமிழில் நவீன அறிவியல் சிந்தனைகளையும் சிந்தாந்தங்களையும், விளையாட்டு மூலமாகவோ அல்லது எளிமையாகவோ விளக்க முயலவேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் இருந்து வந்தது.
தமிழில் எளிமைப்படுத்தப்பட்ட அறிவியல் சிந்தனைகளும் விளக்கங்களும் வேற்றுமொழிகளில் இருக்குமளவிற்கு இல்லையே என்பது நெடுநாளைய ஆதங்கமும் கூட. மேலும், பள்ளிகளில் உயர்நிலைக் கல்விக்குப் பின் தமிழ், தொழில்நுட்பங்களிலிருந்து அந்நியப்படுகிறது என்பது கண்கூடு. இளங்களை அறிவியலுக்குப் பின் சமகாலத்தைய அறிவியல் வளர்ச்சிகளுக்கு வேற்றுமொழியையே நம்பியிருக்க வேண்டியுமிருக்கிறது. பள்ளிநிலைக்குப் பின் கல்லூரி மற்றும் உயர்க்கல்வி அறிவியலில் தமிழ் வழி அறிவியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாகவே உணர்ந்துள்ளேன். அப்படியொரு வெற்றிடத்தை நிரப்பும் ஒரு முயற்சியாகவே இவ்வலைப்பதிவு.
பொருண்மை (Matter), எதிர்-பொருண்மை(anti-matter), என பிரபஞ்சத்தின் தோன்றத்தின் போது ஏற்பட்ட இவ்விரட்டைக்கிடையேயான போட்டியில் வெற்றி பெற்ற பொருண்மையினாலேயே இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதை ஆய்ந்து அறிவித்தற்காக 2008 ஆன் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நம்மைச்சுற்றியிருக்கும் அனைத்தும், ஏன் நாமே சில அணுக்களாலேயே கட்டப்பட்டுள்ளோம். இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் ஒன்றைப் பற்றியும் அது தரும் ஆச்சர்ய அதிர்வுகளையும் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் அடிப்படை அறிவியலுக்கும் சமகாலத்தைய நவீன அறிவியலுக்குமான ஒரு தொடர்பை ஏற்படுத்தும் விதமாகயிருக்குமாறு முயன்றிருக்கிறேன்.
இவ்வலைப்பதிவில் வரும் பதிவுகள் அடிப்படை அறிவியல் குறித்த செய்திகளும் விளக்கங்களும் எளிமையான உரையாடல்களாகவும், அவ்வடிப்படை அறிவியலுக்கும் சமகால அறிவியல் ஆய்வுகளுக்குமுள்ள தொடர்பு பற்றிய குறிப்புகளுடனும் இருக்குமாறு தொடரத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவ்வப்போது சுவாரஸ்யமான அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் பகிரப்படும்.
குறிப்பு: இது கண்டிப்பாக வகுப்பறை கிடையாது, இது அறிவியல் குறித்து கதை பேசுவதற்கான ஒரு குட்டிச் சுவர், ஒரு ஆற்றுப் பாலம், மண்டபத்து திண்ணை, ஒரு தேநீர்க்கடை முச்சந்தி..... வாங்க பேசலாம்.
புகைப்படம் பற்றி: நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் அணுக்களால் ஆனவையே. அணுக்களே நம்மைச் சுற்றியிருக்கும் "இவை" இவையாகவும் "அவை" அவையாகவும், இருப்பதற்கான காரணம். அதனால், மையத்தில் அணுவினைக் குறிக்கும் ஒரு மாதிரி வரைபடத்தையும் நம்மைச் சுற்றியிருப்பவைக்கான சில எடுத்துக்காட்டுப் புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்.